பக்கம் 94:
பெளர்ணமி நிலவின் ஒளி தங்க நிறத்தில் கடலின் மேல் பளபளத்துக்கொண்டிருந்தது. கடல் அமைதியாக இருந்தது. பாய்மரத்தில் இரண்டு கிழவர்கள் பயணித்தபடி இருந்தனர்.யாருமற்ற கடற்கரையில் இந்தப்பெருங்கடல் முன் அமர்ந்திருப்பது தவம். உறவுகள்,வலிகள்,சந்தோஷங்கள்,பேச்சுகள் எதுவுமின்றி அலையோசைக்குள் என்னை புதைத்துக்கொண்டிருந்தேன்.மெளனத்தின் ஆழம் இக்கடலை விட மிகப்பெரியது. சற்று தொலைவில் சில நண்டுகள் அலையாடிக்கொண்டிருந்தன. அவைகளின் உலகில் எது சரி எது தவறென்ற வினாக்கள் இல்லை. போலித்தனமும் பாசாங்கும் இல்லை. அடுத்தது என்ன என்கிற எதிர்பார்ர்பும் இழந்த கணத்தின் துயரங்களுமில்லை. குறிப்பாக துரோகிகள் இல்லை.மரணம் பற்றிய பயத்தை தவிர வேறெதுவுமில்லா வாழ்வு அதற்கு வாய்த்திருக்கிறது.
நகரை விட்டு வெகு தொலைவில் இந்தக் கடற்கரை இருப்பதை இன்றுதான் அறிந்துகொண்டேன். சவுக்கு மரங்கள் அடர்ந்தும் வெள்ளை மணல்மேடுகள் சூழ்ந்தும் இருக்கும் இடத்திற்கு நடுவே சென்ற பாதையில் பயணித்து இங்கே வந்து சேர்ந்தேன். பெயர்தெரியாத பச்சைக்கொடிகள் படர்ந்திருந்தன. அவற்றில் யாரோ விட்டுச்சென்ற பிளாஸ்டிக் பைகளை நாயொன்று முகர்ந்து கொண்டிருந்தது. இரவு மெல்ல நகர்ந்தபடி இருந்தது. இரவுக்குள்ளிருந்து வெளிக்குதித்து கடலில் நீராடிக்கொண்டிருந்தது நிலாத்துளிகள். கொஞ்ச நேரம் நடக்க வேண்டும் போலிருந்தது. காற்று உடலெங்கும் பரவி பரவசநிலையை தந்து என்னை புது உயிராக்க முயன்றுகொண்டிருந்தது. காற்றில் பறந்து வந்த சருகொன்று என் நெஞ்சில் மோதி விழுந்தது. குனிந்து அந்தச் சருகை கையிலெடுத்தேன். எனக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? அவளை முதன் முதலாக சந்தித்த அற்புத நொடி நோக்கி பின்னகர்ந்தது மனம்.
பக்கம் 38:
இரயில் முதல் நடைபாதையிலிருந்து புறப்பட்டு பொழிகின்ற மழைக்குள் ஊடுருவி செல்ல ஆரம்பித்தது.கனத்த இருள் கவ்வியிருந்த அந்த பின்னிரவில் கதவை திறந்துகொண்டு சாரலில் நனைந்தபடியே நின்றிருந்தாள் அவள். அவள் அணிந்திருக்கும் மெல்லிய சேலைக்குள்ளிருந்த வனப்புமிக்க அவளது உடலை தீண்டிய கிறக்கத்தில் மரித்துவிழுந்தன மழைத்துளிகள்.முகமெங்கும் வழிந்து கழுத்தில் இறங்கி ஓடும் நீரில் லயித்தபடி ஏதோவொரு பாடலை முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்.காடுகளின் நடுவே ஓடும் நீரோடையில் நீராடும் வனதேவதையை ஒத்திருந்தது அவளது எழில். கழிப்பறை செல்ல எழுந்துவந்தவன் அவளது பேரழகை தரிசிக்க அருகிலிருந்த கண்ணாடியை பார்ப்பதுபோல் ஓரப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னிருப்பை உணர்ந்தவள் ஒரு பக்கமாய் தலைதிருப்பி என்னை பார்த்துவிட்டு மீண்டும் மழை ரசிக்கலானாள்.அந்த ஒருநொடியில் மின்னிய அவளது கண்களை கண்டவுடன் மெதுவாய் பேச்சுக்கொடுத்தேன்.
மெல்ல வளர்ந்த உரையாடல் தன்னை பற்றி அவள் சொல்லும் அளவிற்கு நீண்டபோது சற்றே நிறுத்தியவள் "ஏன் உங்ககிட்ட என்னை பற்றி சொல்லணும்?" என்பதுபோல் பார்த்தாள்.பின் அவளாகவே சொல்ல ஆரம்பித்தாள். சென்னை நகரில் பிறந்து வளர்ந்த நாட்கள் பற்றியும் தன்னுடைய இருபத்தி இரண்டாவது வயதில் ஒரு விபத்தில் பெற்றோரை இழந்து தன் இரு தங்கைகளின் படிப்புக்காக சிறுசிறு வேலைகள் செய்து சம்பாதித்தது பற்றியும் சொல்லி முடித்தாள். திறந்திருக்கும் ரயில் கதவில் சாய்ந்துகொண்டே அவள் பேசும்போது அவளது கன்னத்தில் மோதி மோட்சம் பெறும் மழைத்துளிகளை சபித்துக்கொண்டிருந்தேன். சற்று நேரம் உறங்கலாம் என்று முடிவெடுத்து இருவரும் எங்களது இருக்கைக்கு திரும்பும் தருணம் "நீங்க என்ன வேலை பார்க்கறீங்க" என்றவளிடம் “ஒரு பன்னாட்டு வங்கியில் வேலை செய்கிறேன்” பொய் சொல்லிவிட்டு அவளுடலை மனதிற்குள் ருசித்துக்கொண்டிருந்தேன்.
பக்கம் 80:
"உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை.உன் சந்திரன் மறைவதுமில்லை.
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்.உன் துக்க நாட்கள் முடிந்துபோம்"
ஏசாயா 60:20.
மீண்டும் மீண்டும் இவ்வரிகளை உச்சரித்து தலைமீது கைவைத்து ஜெபம் செய்தார் தொபரா டீச்சர். கண்ணில் நீர் வழிய கைகள் குவித்து கண்கள்மூடி ஜெபித்துக்கொண்டிருந்தாள் ஹர்ஷிதா. மனதெங்கும் நிறைந்திருந்த துயரத்தை கண்ணீரில் கரைத்துவிட முயன்று கொண்டிருந்தபோது இரவு ஒன்பது மணி என்பதை தேவாலய மணியோசை நினைவூட்டியது.
ஆமென். ஜெபம் முடிந்தபோது தொபரா டீச்சரின் கண்ணிலும் நீர் வழிந்திருந்தது. அவள் தோள்தொட்டு எழுப்பியவர் நெற்றியில் முத்தமிட்டு வழிகின்ற கண்ணீரை துடைத்துவிட்டார். சிறிது நேர மெளனத்திற்கு பின் விடைபெற்று தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ஹர்ஷிதா.சற்று நேர நடைக்குப் பின் மீண்டும் அவள் மெளனம் உடைத்து உள்நுழைந்தது அந்த பெரும்சத்தம்.அவன் அவளுக்குள் அந்த சத்தம் வழியே நுழைந்துகொண்டிருந்தான்.பயத்தில் வீட்டை நோக்கி அலறியபடி ஓடத்துவங்கினாள் ஹர்ஷிதா.
பக்கம் 93:
வெய்யில் உக்கிரமடைந்திருந்தது. ஓர் ஊனப்பறவை தத்தி தத்தி மரத்தை சுற்றி வந்ததை பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.பச்சை நிறமும் இளமஞ்சள் நிறமும் கலந்து ஒருவித புது நிறத்தில் அதன் அழகு ரசிக்குப்படி இருந்தது. என் அலுவலக ஜன்னல் வழியே அப்பறவையின் பறக்க இயலாத ஊனத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது சற்று தொலைவில் அவளை கண்டேன். யாரோ ஒருத்தியென்று அலட்சியப்படுத்திவிட்டு மீண்டும் அந்த ஊனப்பறவையை கண்கள் தேடியபோது சுருக்கென்று மனதை ஏதோ குத்தியது. அவளாக இருக்குமா? உடனே அந்த பெண்ணை பார்த்தேன். சற்று தொலைவு என்பதால் அவளது முகம் சரியாக புலப்படவில்லை. விறுவிறுவென்று அலுவலகத்தைவிட்டு வெளியே வந்து அவள் நின்றிருந்த திசை நோக்கி ஓட்டமும் நடையுமாய் சென்றேன். அருகே நெருங்க நெருங்க அது அவள்தான் என்பது மிகத் தெளிவாக தென்பட்டது. அவளுக்கு ஏன் இந்நிலை அய்யோ கடவுளே. ஷர்ஷிதா உடை கிழிந்து அழுக்குத் துணியுடன் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தாள். கண்கள் நிலைகுத்தியிருந்தன. மனச்சிதைவுக்கு உள்ளான பெண்ணைப் போல் தோற்றமளித்தாள். உடலெங்கும் மின்சாரம் பாய அருகிலிருந்த மரத்தில் சாய்ந்து நின்றுவிட்டேன்.
பக்கம் 110:
தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து காரை எடுத்துக்கொண்டு கடற்கரை சாலையில் விரைந்தேன். முதன் முதலாக இந்தக் கடற்கரைக்குத்தான் அவளை அழைத்து வந்து…... ஷர்ஷிதாவுக்கு நான் செய்த துரோகம் என்னை வாட்டி எடுத்தது. அவள் போன்ற பேதைக்கு இந்நிலை ஏற்பட்டிருக்ககூடாது. இனி வாழ்ந்து என்ன ஆகிவிடப்போகிறது? தேவதையை போல் வந்தவள் இன்று தெருத்தெருவாக பிச்சை எடுக்க நான் தானே காரணம்.
வேகமெடுத்தது என் பி.எம்.டபிள்யூ. வாங்கி வந்த விஷமும் அதைக் கலந்து குடிக்க வாங்கிய பியரும் பக்கத்து இருக்கையில் இருந்தது. கடற்கரையில் யாருமில்லை. நிலா பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்று பெளர்ணமியாக இருக்கலாம். கால்கள் மணலில் புதைய கடலை நோக்கி நடந்தேன். கடலுக்கு மிக அருகில் ஒரு உருவம் கிடந்தது. அவனது நெஞ்சில் குவிந்திருந்த மணலில் காய்ந்த இலையொன்று சொருகப்பட்டிருந்தது. அவன் இறந்து ஒரு மணிநேரம் ஆகியிருக்கலாம். திடீரென்று என்னை நோக்கி ஒளிக்கற்றைகள் பாய உயர்த்தி பிடித்த டார்ச் லைட்டுடன் வந்துகொண்டிருந்தார் காக்கிச்சடை அணிந்த ஒருவர்.
எழுதப்படாத பக்கம்:
நாவலின் கதைச்சுருக்கம்:
ஷர்ஷிதா – ரயில் – நான் – காதல் –பணம் - துரோகம் – மனச்சிதைவு – விரக்தி – தற்கொலை – கொலை – போலீஸ் – நான் –மரணம் – முற்றும்.
நாவலின் கதாபாத்திரங்கள்:
ஷர்ஷிதா,நான் மற்றுமோர் அந்நியன்.
-நிலாரசிகன்.



10 comments:
//மரணம் பற்றிய பயத்தை தவிர வேறெதுவுமில்லா வாழ்வு அதற்கு வாய்த்திருக்கிறது//
என்று தொடக்கி ஓர் அருமையான படைப்பை விட்டு சென்றிருக்கிறீர்கள்.. மிகவும் ரசித்தேன்...
நன்றி நதி.
Nila,
The story was awesome. I cud see harshita in my eyes when I was reading the story. A very good theme. A different attempt.
A Fantabulous one......
- Priya
நன்றி ப்ரியா
NilaRaseegan,..
Migavum arumaiyai irunthathu kadhai..
Sila varigal manathai thotu ponathu... sila varigal manathin adiazham varai niranthu nirkirathu...
Romba Azhaga athae samayathil elimaiya oru navalayae sirukadhaiya solitinga....
Mendum Mendum Manthirkul alaimothum varigal..
//அவைகளின் உலகில் எது சரி எது தவறென்ற வினாக்கள் இல்லை. போலித்தனமும் பாசாங்கும் இல்லை. அடுத்தது என்ன என்கிற எதிர்பார்ர்பும் இழந்த கணத்தின் துயரங்களுமில்லை.//
//சற்று நேர நடைக்குப் பின் மீண்டும் அவள் மெளனம் உடைத்து உள்நுழைந்தது அந்த பெரும்சத்தம்.அவன் அவளுக்குள் அந்த சத்தம் வழியே நுழைந்துகொண்டிருந்தான்.பயத்தில் வீட்டை நோக்கி அலறியபடி ஓடத்துவங்கினாள் ஹர்ஷிதா//
-Kalaivani
வித்தியாசமான உத்தியை பயன்படுத்தி இருக்கிறீர்கள் நிலா. ரசித்து வாசித்தேன்.
நன்றாக இருந்தது நிலா!
வித்தியாசமான கரு நிலாரசிகன். கதையை சொன்ன விதம் மிக அருமை. சுருங்கவும் சொல்லாமல், மிகைப்படுத்தவும் இல்லாமல் கச்சிதமாய் சொல்லி இருக்கிறீர்கள். முதல் பத்தியின் ஒவ்வொரு வரிகளிலும் பொதிந்திருக்கும் உண்மைகள் சுடுகின்றன. நல்ல படைப்புக்கு வாழ்த்துக்கள் :)
[நாவலும் மெகா சீரீயல் போல்தானா? மொத்த நாவலில் ஐந்து பக்கங்களை படித்தாலே கதை புரிந்துவிடுமே... ;)]
Fantastic nila
kathain oodey nanum payanithen
ennku ondru puriya villai
avaludaiya nilaikku avan than karanam endru eppadi slla mudiyum
nallayirunthathu...nila!
Post a Comment