Saturday, January 11, 2014

My Book Release


Thursday, January 09, 2014

என் புதிய கவிதை நூல்

 
நண்பர்களுக்கு,


என்னுடைய மூன்றாவது கவிதை தொகுப்பு “கடலில் வசிக்கும் பறவை” புதுஎழுத்து வெளியீடாக இன்னும் சில தினங்களில் வெளியாகிறது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
கடந்த வாரம் வரையில் இந்நூல் வெளியாவது எனக்கே தெரியாது. கவிதைநூல் கொண்டுவருகின்ற
அகநிலையும் புறநிலையிலும் நானில்லை. எதற்கென்றே தெரியாமல்தானே அனைத்தும் நிகழ்கிறது. இந்த பறவையும் கடலுக்குள்ளிருந்து எனை நோக்கி பறந்து வந்தது கடந்த வெள்ளியன்று காலை எட்டு முப்பந்தைந்து மணிக்கு. இவ்வளவு குறுகிய நாட்களில் இந்த அசாத்திய பறவையை வெளிக்கொண்டு வருவதற்கு கடுமையான பணிச்சூழலுக்கும் நடுவில் அசராமல் உழைத்த/உழைக்கும் மனோன்மணி அவர்களுக்கு கடலை விட மிகப்பெரிய நன்றியும் அன்பும்.
மேலும், நண்பர்கள் வெய்யில்(ஓர் இரவில் அட்டைப்படம் வடிவமைத்த மகாகலைஞன்),அனிதா,சுகுணா,விழியன் அனைவருக்கும் நன்றி எனும் ஒற்றைச் சொல் போதாது.பேரன்பும் நட்பும் மட்டுமே மிச்சமிருக்கிறது என்னிடம். என் பிரார்த்தனைகளுக்கு செவிகொடுத்து வழிநடத்தும் அன்பானவருக்கு லட்சம் முத்தங்கள்.
 
நூல் வெளியீட்டின் புலம் மற்றும் நேரம் விரைவில்..
நட்புடன்,
நிலாரசிகன்.

Wednesday, January 01, 2014

கவிதைகள் பத்து

1.
தனியே ஆடிக்கொண்டிருக்கிறது
ஓர் ஊஞ்சல்.
பின் நின்றது சிறிது நேரம்.
தலைகவிழ்ந்து அழுதுமிருக்கலாம் அல்லது
இளைப்பாறியுமிருக்கலாம்.
தூரத்தில் வந்துகொண்டிருக்கின்றன
ஒரு ஜோடி கால்கள்.

2.
அறைநீங்கும் பொழுதில்
கதவை சாத்திவிட்டு செல்.
திறந்திருக்கும் கதவின் வழியே
நேற்றொரு ஓநாய் நுழைந்தது.
இன்று
மறியொன்று ஊளையிட்டபடியே
வெளியே ஒடுகிறது.

3.
நீங்கள் ஏன் பூனைக்குட்டிகளை
ரசிப்பதேயில்லை.
சப்தமிட்டுக்கொண்டிருக்கிறது என்று
நேற்று அதனை வெளியே வீசினீர்கள்.
இன்று
உங்களது இரைச்சலில் அழுகிறது
வாலொன்றை ஆட்டுகின்ற சிறுமிருகம்.

4.
எப்பொழுதும் முத்தமிட்டுக்கொண்டிருத்தல்
சாத்தியமே இல்லை.
முத்தமென்பது முத்தமாக மட்டுமே
நின் மனதுள் வியாபித்திருந்தால்.
5.
ஒரு மரம்.
அதன் கிளைகளெங்கும்
கிளிகள்.
ஒரு கிளி
அதன் கால்களின் கீழெங்கும்
மரங்கள்.
6.
கடலுக்குள் கூடுகட்டியிருக்கும்
பறவையை நானறிவேன்.
அதன் சிறகின் மேற்புறம்
அமர்ந்து இச்சிறு உலகை
காணும்பொழுதெல்லாம்.
7.
அந்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்தார்கள்.
அதன் கிளைகளிலிருந்து கூடொன்று
விழுந்து சிதறியது.
ஒற்றைக்கால் ஒடிந்த பறவைக்குஞ்சு
தத்தி தத்தி புதருக்குள் ஓடுகிறது.
புதருக்கு வெளியே வருகையில்
காகமொன்றின் அலகில்
அது சிக்கியிருக்கிறது.
இனி,
மரக்கன்றுகள் ஆயிரம் நடும்
விழாவில் மலம் கழித்துச் சிரிக்கும்
அக்காகம்.
8.
இரவில் ஒளிரும் கண்களை
மிருகத்திடம் கடன் வாங்கியவன்
அன்றிரவு மாபெரும் மிருகமாகினான்.
அதிகாலைப் படுக்கையில்
களைத்துக்கிடந்தன
மலைபாம்பும் அதனருகே
குருட்டுப்பூனையும்.

9.
அன்றுதான் தனக்கு கால்கள்
இல்லையே என்று வருந்தியது
குளம்.
குளத்திலிருந்து எழுந்து வீடு
நோக்கி நடப்பவர்களின்
நீர்ச்சுவடுகளை பார்த்தபடி.
10.
வார்த்தைகள் தீர்ந்த குளக்கரையில்
அமர்ந்திருக்கிறேன்.
அதன் மெளனத்தோடு
என் மெளனம் எக்காலத்திலும்
உரையாடும்.
- -நிலாரசிகன்.

Happy 2014 friends.

Tuesday, December 10, 2013

கவிதைகள் ஆறு

1.வித்தியாசனும் தா....மதனும்


எதையும் வித்தியாசமாக செய்யவேண்டும்
என்று நினைப்பவன் யாரும் அறியாதபடி
தன் வீட்டுத்தோட்டத்தில் சிங்கக்குட்டிகளை
வளர்க்கிறான். அவை மே என்று கத்துகின்றன.
மலையொன்றின் மீதமர்ந்து
சரிவை நோக்கி தூண்டில் வீசுகிறான்.
காகங்களை பிடித்துவந்து கூண்டிற்குள்
அடைத்துவைத்து முகமன் கற்றுத்தர முயல்கிறான்.
நேற்றின் மீது எழுதப்பட்ட கவிதைகளின்
வரிகள் ஒவ்வொன்றாய் உருவி நாளைக்குள்
எறிந்தபடி நடனமிடுகிறான்.
புணர்வொன்றின் உச்சத்தில் அவனுக்கு
ஒன்றும் நடந்துவிடாத பாவனையில்
சிப்ஸ் சாப்பிடும் யுவதியொருத்தியின்
நினைவு வந்து அடடா அது ஓர் அற்புதகணம் என்கிறான்.
வித்தியாசனை பின் தொடர்ந்து வந்த
தாமதன் அனைத்திலும் தாமதமாகவே இருக்கிறான்.
மீசை வளர்வதற்கே அவனுக்கு இருபத்தி ஏழு
வயதாகிற்று.
தினமும் அவன் எழுதும் வரிகள்
நான்கு மாதம் கழிந்தே கவிதைகள் ஆகின்றன.
அவனது காதலி இரண்டாவது மாடியிலிருந்து
அவனுக்களித்த பறக்கும் முத்தம்
அவளது குழந்தையின் பாதம் பூமி தொட்டபின்பே
அவனைச் சேர்ந்து நகைத்தது.
தானொரு அறிவிலி என்று உணர்ந்த நாளில்
அவனது நாற்பதாவது வயது துவங்கிற்று.
அறியா தேசம் போய்விட தீர்மானித்து
ரயிலுக்காக காத்திருக்கிறான்.
நாற்பத்தெட்டாவது வயதில் அசைந்து
வருகிறது ரயில்.
அதிலிருந்து வெளிக்குதித்து தன் சுண்டுவிரலால்
ரயிலின் வேகத்தை குறைத்து
தலைகோதியபடி செல்கிறான் வித்தியாசன்.
இருவேறு ஊர்களில் அடைமழையும்
மென்சாரலும் பொழிந்துகொண்டேதான்
இருக்கின்றன எப்போதும்.


2.காற்றில் மிதந்தலையும் இறகன்

என்னிரு உள்ளங்கைகளிலும் மறைத்து
வைக்கப்பட்டிருந்தன இரண்டு கண்கள்.
யாரும் இல்லாத தெருவில் அழுதபடியே
தலைகவிழ்ந்து நடந்து செல்லும்
தனியனுக்கு ஒன்றும்
மழை பொழியும் கணங்களில்
தலை சாய்த்து வான் பார்த்து
வா மழையே பெருமழையே என்று
லயித்து மழையாகும் மிருதுவானவனுக்கு
மற்றொன்றும் கொடுத்துவிட்டேன்.
அதீதமாய் அழுவதற்கோ அல்லது
அதிகமாய் புன்னகைப்பதற்கோ அதனை
அவர்கள் பயன்படுத்தக்கூடும்.
இப்பிரபஞ்சத்துடன்
நான் ஆடும் புதிர் விளையாட்டில்
கண்களின்றியும் அனைத்தையும் காண்கிறேன்.
புன்னகைத்தபடியே அழவும்
அழுதுகொண்டே புன்னகைக்கவும் கற்றுக்கொண்டன
என் இனிப்பிதழ்கள்.
யார் வேண்டுமானாலும் முத்தமிடலாம்
என்னை.
காரணமின்றி காயப்படுத்தவும் செய்யலாம்.
காற்றில் மிதந்தலையும்
இறகில் நீங்கள் காணக்கூடும்
கண்களையும் அதனுள்ளே வெகு ஆழத்தில்
கைகள் விரித்தபடியே நகர்கின்ற நதியுருவனையும்.
 
3.ஆட்டுக்குட்டிகள் அழகானவை

என் பிரார்த்தனையில் என்னைத் தவிர்த்து
பிறரை மட்டுமே நினைத்த நொடியில்
கைகளில் ஒரு கொத்து ரோஜாப்பூக்களை
தந்து சென்றார் கர்த்தர்.
மெளனத்தின் இசைக்குள் கண்கள் மூடி
பேரமைதியுடன் லயித்திருந்தபொழுதில்
புன்னகைத்து கையசைத்தார் புத்தர்.
நடுங்கிய உடலுடன் அடர்குளிரில்
மரத்தடியொன்றில் ஒண்டியிருந்த
சிங்கக்குட்டியை கட்டியணைத்த கணத்தில்தான்
கர்த்தரும் புத்தரும் ஒன்றாய் தோன்றினர்.
அதிகாலையில் சேவல் கூவிற்று.
வரமறுக்கும் ஆட்டுக்குட்டியை தரதரவென்று
இழுத்துவந்து முட்டியால் அதன் கழுத்தில்
அழுந்தப்பிடித்தபடி கழுத்தறுத்து கருப்புச்சட்டியில்
இரத்தம் பிடித்து பீடியை இழுத்தான்
கனவில் புத்தனையும் கர்த்தனையும்
கண்டவன்.
அந்த நாள் அவ்வளவு ரம்மியமாய்
துவங்கியது.


4.பெயரற்றவனின் பகல்

அதிகாலை நான்கு முப்பது மணிக்கு
அவன் விழித்தபோது தன் பெயர்
என்னவென்பது மறந்துபோனது.
எவ்வளவு முயன்றும் நினைவில்
மலராத தன் பெயரை ஓடிச்சென்று
அலைபேசிக்குள் தேடிக் களைத்தான்.
டியர்,டார்லிங்,நாயே,மச்சி,மாமோய்
என்று ஆரம்பிக்கும் எந்தவொரு குறுஞ்செய்தியிலும்
அவனது பெயர் எழுதப்படவில்லை.
இதயத்துடிப்பு அதிகமாகி எங்கே சென்று
பெயரைத் தேடுவது என்று குழம்பியவன்
யாரிடமும் கேட்காமலும் ஆவணங்கள்
எதனையும் பார்க்காமலும் தன் பெயரை
கண்டுபிடித்துவிட தீர்மானித்து,
பால்க்காரனுக்காக வாழ்வில் முதன்முறையாக
காத்திருக்கத்துவங்கியவனை
"சார் பால்" என்று சிரித்தபடி பாக்கெட்டுகளை
கொடுத்துவிட்டு நகர்ந்தான் பால்க்காரன்.
பேப்பர்க்காரனை நம்பி சோர்ந்துவிடாமல்
அவசரமாய் அலுவலகம் செல்ல‌ நினைத்த கணம்
இன்று ஞாயிற்றுக்கிழமை
என்பது ஞாபகத்தில் மலர்ந்து
இதயத்துடிப்பை அதிகப்படுத்தியது.
கடன் அட்டைக்காகவோ அல்லது
வங்கிக்கடனுக்காகவோ யாரேனும் அழைத்துவிட்டு
தன் பெயரை உச்சரித்துவிட மாட்டார்களா என்று
பெருங்கவலை கொண்டவன் அசையா சிலையென
அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தான்.
திடீரென்று த‌ன் காத‌லியின் ஞாப‌க‌ம் வ‌ந்து
அவளுக்கு முத்தக்குறியிட்டு ஒரு
குறுஞ்செய்தி அனுப்பினான்.
அவள் பதிலுக்கு "இட் இஸ் ஸ்வீட் டா"
என்று மறுமொழிந்தாள்.
தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தவன்
மிகத்தீவிரமாய் யோசிக்கத்துவங்கினான்.
முகநூலில் புனைப்பெயர்.
அலைபேசியில் "என் எண்".
வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டிருக்கும்
கடிதப்பெட்டியின் மீது "ஏ4".
உற‌ங்குகின்ற‌ அப்பாவுக்கு "எருமை".
அம்மாவுக்கு "ய‌ய்யா".
எதிர்வீட்டு பாப்பாவுக்கு "ண்ணா"
எதற்குள்ளும் தன் பெயர் இல்லை.
இரவு நெருங்கிக்கொண்டிருந்தது.
பெய‌ர் என்ன‌வென்று தெரியாத‌ துடிதுடிப்புட‌ன்
"என் பெயர் என்ன?" கெஞ்சும் குரலில்
முன‌க‌த்துவ‌ங்கினான்.
விடிய‌லை அறிவித்த‌ப‌டி வ‌ந்துவிழுந்த‌து
வெய்யில்.

5.மூன்றாம் கனவினள்

இருண்ட வீட்டில் கையில் பொம்மையுடன்
அமர்ந்திருக்கும் சிறுமி
அவனது கனவில் அடிக்கடி தோன்றுகிறாள்.
தன் இரண்டு இதயங்களும் வேகமாக
துடிப்பதை உணர்பவன்
உடன் விழித்துக்கொள்கிறான்.
அருகில் உறங்கும் தன் குழந்தையை
தொட்டுப்பார்த்து பதறுகிறான்.
சிறுமியின் பொம்மை மெல்ல மெல்ல
கண்கள் திறந்து மெதுவாய் தலையை திருப்புகிறது.
அவளது மடி நீங்கி இவனது கனவுக்குள்
நுழைகிறது.
கனவின் தூரத்தை ஒரே கணத்தில்
கடந்து உறங்கும் குழந்தையின் அருகில்
படுத்துக்கொள்கிறது.
அதன் மிகக்கூரிய நகங்களால்....
முதல் கனவில் சிறுமியின் மடி பொம்மை.
இரண்டாம் கனவில் குழந்தை படுக்கை பொம்மை.
தன் உடலெங்கும் எரியும் நகக்கீறல்களால்
தரையில் புரள்பவனின் எதிரே
தீர்க்கப்பார்வையுடன் அமர்ந்தபடி
தன் இடமுலையை அறுத்துக்கொண்டிருக்கிறாள்
வலமுலையை பொம்மைக்கு
ஊட்டும் இளம்தாய்.
 
6. பெண் கங்காரு

வேகமாய் வீட்டிற்குள் ஓடுகிறவனின்
உடலிலிருந்து உதிரத்துவங்குகின்றன
சொற்கள்.
அள்ளியெடுக்க இயலாமலும் விழுவதை
தடுக்க இயலாமலும் தடுமாறி ஓடுகிறான்.
மூச்சுவாங்க வரவேற்பறையில் அமர்பவன்
அனுஷ்காவின் புன்னகையை ரசிக்கிறான்.
நீலநிற அவளது கண்களின் கரைந்து
அற்புதம் அற்புதம் என்று பிதற்றுகிறான்.
அவள் அழுதால் தானும் அழுவதாக
பாவனை செய்து கண்ணீர் சிந்துகிறான்.
இப்போது தன்னுடலிலிருந்து தெறிப்பது
சொற்கள் அல்ல பூக்கள் என்றெண்ணுகிறான்.
அனுஷ்காவின் காதலனை பழிப்பவன்
கையிலொரு காய்ந்த ரோஜாப்பூவை
தலைகுனிந்தபடி பார்த்து கதறுகிறான்.
உடல் நீங்கி அறையெங்கும் வியாபித்திருக்கும்
சொற்கள் ஒவ்வொன்றாய் கண்விழிக்கின்றன.
நீந்தி நீந்தி அருகிலிருக்கும் சொற்களுடன்
சேர்ந்துகொண்டு உருவமெடுக்கின்றன.
சோபாவில் கண்ணயர்ந்து அனுஷ்காவுடன்
கங்காருகளின் நடுவே ஓடுகின்ற அவனது
கனவினை துன்புறுத்தாமல்
சுயமாய் கவிதையொன்றை உருவாக்குகின்றன.
அவனது மின்னஞசல் மூலமாய் கவிதையை
இதழொன்று அனுப்பிவிட்டு ஒவ்வொரு சொல்லாய்
உடலுக்குள் நுழைந்து செல்லாகின்றன.
அதிகாலை விழிப்பவன்
அவளொரு பெண் கங்காரு என்றபடி
தன் பிடறியை ஒரே ஒருமுறை சிலிர்த்துக்கொண்டான்.

-நிலாரசிகன்.

 

Sunday, October 27, 2013

தனிமை என்றொரு டிராகன்


1.ஜூலியட்சி

மறியொன்றை பாழ்கிணற்றுக்குள்
புன்னகைத்தபடியே வீசிவிட ஜூலியால்
மட்டுமே முடியும்..
அவனது மறி துடிக்கின்ற கணங்களில்
மெளனத்தின் மதுவை ருசித்துக்கொண்டும்
பெருக்கெடுக்கும் குருதியில் நனைகின்ற‌
பொழுதுகளில்
தேநீர் அருந்தவும் அவளால்
மட்டுமே முடியும்.
தான் விரும்பும் நேரங்களில் அவனை
மறியாக்கி மடியில் கிடத்திடுவாள்.
தான் தன்னை விரும்பும் நேரங்களில்
கிணற்றில் தள்ளிவிட்டு நகர்ந்திடுவாள்.
காலத்தின் அசுர நாவு அவனது
உடலை தீண்டியபடியே கடந்துசெல்கிறது.
யட்சியின் முள்மனதில் அவனது
மறியின் கல்லறை எழும்புகிறது.
மெளனத்தின் மதுவை அவனது
இதழ்கள் ருசிக்க துவங்குகையில்
கரடிபொம்மையொன்றை கட்டியணைத்தபடி
நிம்மதியாய் உறங்குகிறாள்
ஜூலி-யட்-சீ.


2.முடிவுகள் மற்றும் முடிச்சுகளுடன் நிற்கும்ஓர் ஆப்பிள் மரம்.

ஓநாய்க்குட்டிகளுடன் அதன்
நிழலில் தங்குகிறாள் யுவதியொருத்தி.
நடுநிசியில் தன் கழுத்திலிருந்து நீளும்

கயிற்றின் மறுமுனையை கிளை நோக்கி வீசுகிறாள்.
முடிச்சின் இறுக்கத்தில் அதன் கிளையில்
தழும்பொன்று மலர்கிறது.
ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஓநாய்க்குட்டிகளின்
மேல் ஒன்றிரண்டு இலைகள் வந்தமர்கின்றன.
தன் இடமார்பில் பொறித்திருக்கும்
பச்சைப்பெயரை வருடிக்கொடுக்கிறாள்.
முடிவொன்றின் மேல் படுத்திருப்பவளின்
உடல் வெம்மையில் சிவந்திருக்கிறது.
விழிநீர் துடைத்து துடைத்து அழுகிறாள்.
அவள் காணாத விடியலில்
பழுக்க துவங்கியிருக்கும் அதன் கனிகள்
சொட்டுச் சொட்டாய் கண்ணீர் சிந்துகின்றன.
மிக நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருக்கின்றன
ஓநாய்களும்,குட்டிகளும்.

3.தனிமை என்றொரு டிராகன்

அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவன்
தன் வரவேற்பறையில்
படுத்திருக்கும் டிராகனின் தலையை
தடவிக்கொடுத்துவிட்டு சட்டையை கழற்றினான்.
அந்த டிராகன் தீயை உமிழ்ந்தபடியே
மூலையில் படுத்திருந்தது.
வாங்கி வந்திருந்த ஆரஞ்சு பழத்தை
அதனிடம் நீட்டினான்.
அது முகம் திருப்பிக்கொண்டது.
அருகில் அழைத்து தன் மடியில் கிடத்திக்கொண்டான்.
அவனது கன்னங்களில் முத்தமிட்டு
ஆரஞ்சு பழத்தை சுவைத்தது.
டிராகனின் தலையை வருடிக்கொடுக்கும் பொழுது
அவள் ஞாபகம் நெஞ்சின் மீது
ஓர் உதைவிட்டது.
மழை நாளொன்றில் கடற்கரை மணலில்
அமர்ந்திருந்தார்கள் அவர்கள்.
அவளது கால்களை தன் மடியிலெடுத்து
ஒவ்வொரு நகமாக முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.
வெட்கத்தில் மழை கடலை
தழுவிக்கொண்ட பொழுதில்
கடற்கரையெங்கும் சிறு பூச்செடிகள் முளைத்து
மறைந்தன.
மடியிலிருந்த டிராகன் உறங்கியிருந்தது.
கண்ணாடி தம்ளரில்
அசைகின்ற நீரைப் போல் அந்த
பின்னிரவு தெருநாய்களின்
குரைப்புச்சத்ததில் தளும்பியபடி இருந்தது.

 - நிலாரசிகன்.

Monday, September 30, 2013

வலிக்கவிதைகள் இரண்டு1.ரகசியத்தின் அறை

அறையில் மூலையில் பார்க்கும்பொழுதே
முளைத்து வளர்ந்து கிளை பரப்பி நிற்கிறது
ரகசியத்தின் செந்நிற மரம்.
அதன் கிளைகளில் தலைகீழாய் தொங்குகின்றன
அழுக்கடைந்த அன்பின் முட்டைகள்.
ஒவ்வொரு முட்டைக்குள்ளிருந்தும் வெவ்வேறு
உருவத்துடன் வெளிக்குதிக்கிறார்கள் காதலிகள்.
சர்ப்பமென சுருண்டிருக்கும் அவனது
உடலின் கதவுகளை தங்களது இரட்டை நாவினால்
எட்டித்தள்ளி உள்நுழைந்து தின்னத்துவங்குகிறார்கள்.
காதலிகளின் எச்சில்கள் படும் இடமெங்கும்
முளைக்கின்றன ஈச்சமரங்கள்.
அவனது உடல் வெப்பத்தில் உருகி
பாலையின் நடுவில் ஓடும் நதியாகிறது.
நதியில் மிதக்கும் முகில்கள் ஒவ்வொன்றிலும்
நடனமிட்டு சிரிக்கிறார்கள் தீராக்காதலிகள்.
ரகசியத்தின் சமுத்திரத்தை நோக்கி
மெதுவாய் நகர்கிறது நதி.
அறையின் மற்றோர் மூலையில்
காதலிகளின் மார்பில் கிறங்கிக் கிடக்கிறது
மகாசமுத்திரம்.
மகாசமுத்திரம்.

2. இம்பாலாவின் முத்தங்களும்
வனத்திடை திரியும் காடிப் பெண்ணும்

அடர்ந்து படர்ந்திருக்கும் புழுதிப்புற்கள் மீதமர்ந்து
காடியை அவள் மிகவும் ருசித்துக் குடித்துக்கொண்டிருந்தாள்.
அவளது கால் நகங்களின் பிடியில்
ஒரு இம்பாலா* துடிதுடித்துக்கொண்டிருந்தது.
குடுவைக் காடியை குடித்து முடித்தபின்பு
மிக நிதானமாய் அதனது குரல்வளையை கெளவினாள்.
உடலெங்கும் முத்தங்கள் தேக்கி வைத்திருக்கும்
அதனது ப்ரியவுடலைவிட்டு பிரிந்தது உயிர்.
வனம் அதிர சிரித்தவள் ஒவ்வொரு முத்தங்களிடமும்
தன் கூர்நகத்தினை காண்பித்தாள்.
ஒவ்வொரு முத்தமாய் கண்கள் மூடி
மரிக்க துவங்கின.
கடைசி முத்தம் அவளது நகத்திடம்
நலமா என்றது.
கூர்நகம் தலைகவிழ்ந்து தரை நோக்கியது.
சற்று நேரம் கழித்து
பாதையெங்கும் குருதி வழிய வாலாட்டி
நடந்து செல்பவளை பின் தொடர்கின்றன மரித்த முத்தங்கள்,
தங்கள் உடலெங்கும் வனத்தின் வெம்மையை
அப்பியபடி.

-நிலாரசிகன்.Monday, September 16, 2013

கோட்டிப்பயலும் பச்சைநிற காக்கைக்கூட்டமும்இந்த புத்தன்
காலை 5.40க்கு கண்ணாடி யன்னலை
இரண்டுமுறை கொத்தி எழுப்பும் காகத்தின்
முகத்தில்தான் தினமும் விழிக்கிறான்.
இரண்டு நதிகள் சேருமிடத்திற்கு
ஓட்டமும் நடையுமாய் வயிற்றை பிடித்துக்கொண்டு
ஓடி - அமர்ந்து - எழுந்த பின்பு சூரியனை
மேலெழ கட்டளையிடுகிறான்.
வீடு திரும்பும் வழியில் அவனுக்கு
பாட வேண்டும் போலிருக்கிறது.
சப்தமிட்டு பாடிக்கொண்டே குதித்தோடுகிறான்.
எருமைகள் மிரண்டு நகர்கின்றன.
ஓடிச்சென்று கிளைகளற்ற மரத்தடியில்
அமர்ந்து இமை மூடுகிறான்.
காகமொன்றின் சிறகில் பயணித்து
மஞ்சள் நதியில் "ஸ்லோ மோஷ"னில் விழுகிறான்.
நீச்சல் தெரியாமல் தத்தளிப்பவனின்
தலைமயிர் பிடித்திழுத்து கரைசேர்க்கிறாள்
யுவதியொருத்தி.
கனவுகளை மிதித்து எழுந்தவன்
தன் உடலெங்கும் ஆயிரம் மொட்டுகள்
ஒளிர்வதை பெருமிதத்தடன் தொட்டுப்பார்க்கிறான்.
யன்னல் காகம் "கோட்டிப்பயல்" என்று
நினைத்து சிரித்துக்கொண்டு பறக்கிறது.
இந்த புத்தனின் அதிகாலை
எப்போதும் இப்படித்தான் புலர்கிறது.

இந்தக் காதலன்

மலை கண்டால் லயித்து நிற்பவன்
மழையில் நனைந்துகொண்டே விசிலடிப்பவன்
காகத்தின் சாம்பல் நிறத்தில் நுழைந்து
தனியொரு உலகில் வாழ்ந்து திரும்புகிறவன்
இடக்கை சுண்டுவிரலுக்குள் காதலை இழுத்துப்பிடித்து
அதிகாலைக் கடற்கரையில் ஓடுபவன்
மிகச்சிறிய இதயத்தின் நான்கு அறைகளுக்குள்ளும்
வெவ்வேறு கண்ணாடிகளை புதைத்து வைத்திருபவன்
அழுதுகொண்டே நகரும் சரக்கு ரயில்களிடம்
புன்னகைத்து கையசைப்பவன்
பின்னிரவுக் கனவுகளிடம் மனம் நெகிழ
உரையாடி களைத்துறங்குபவன்
கவிதையின் வரிகளிடையே வளைந்து நெளிந்து
சிறுவனாகி ஓடி ஒளிபவன்
நெடுஞ்சாலையோர குட்டைகளில் இறங்கிச்சென்று
மீன்குஞ்சுகள் பிடித்து பின் விடுவிப்பவன்
அஃறிணைகளுடன் வெகுநேரம் கலந்து கரைபவன்
மங்கிய விளக்கொளியில் மிதமாய் கசிகின்ற
இசை ரசித்து ரசித்து கோலா குடிப்பவன்
தோல்விகளின் தலைகோதி வெற்றிக்கு
இதழ் முத்தம் தந்து மெளனித்துக்கிடப்பவன்
நிறைவேறாக் காதலின் நினைவுகளை
முன்னிரவில் நினைத்து நடுநிசியில் மறப்பவன்
டயனோசர் குட்டிகளை அந்திநடைக்கு
அழைத்துச் செல்பவன்
அலைபேசிக்குள் உறங்கும் எண்ணற்ற
எண்களை பார்வையால் வருடுபவன்
கரடிபொம்மைகளுக்கு டாட்டா காட்டிவிட்டு
வெளிக்கிளம்புகிறன்
அனைத்தையும் திளைக்க திளைக்க
காதலித்து எப்போதும் காதலில் திரிபவன்
இந்த மகாக் காதலன்!

கோட்டிப்பயலும் பச்சைநிற காக்கைக்கூட்டமும்

இந்தக்கவிதைக்கு இப்படியொரு தலைப்பை
கொடுத்தது நீங்கள்தான்.
உங்களுக்கான இக்கவிதை இப்பொழுதுதான்
பிறந்திருக்கிறது.
துணிவிலக்கி பாலினம் என்னவென்று பார்ப்பதில்
நீங்கள் காட்டும் மும்முரத்தால் நிசப்தத்தில்
அழுகிறது.
நதியோர கிராமமொன்றில் கோணவாயனுக்கும்
சிவந்திகனிக்கும் பிறந்தவனுக்கு நீங்கள்தான்
கோட்டிப்பயல் என்று பெயரிட்டீர்கள்.
அவனது உலகில் கோடரியால் உங்களது பொய்களை
எழுதிச் சிரித்தீர்கள்.
காலம் தன் குதிரைக்கால்களால் வெகுவேகமாய்
ஓடிப்போனதில் பட்டணத்தில் வந்து நின்றான்
கோட்டிப்பயல்.
பரிசுத்தமான அன்பைத்தேடி துவங்கிய அவனது
பயணத்தின் ஒவ்வொரு நிறுத்தத்திலும் நீங்கள்
சிறுநீர் கழித்தீர்கள்.
தன் இருபத்தோராவது வயதில் கவிதையொன்றை அவன்
பிரசவித்தபோது சவத்துடன் ஒப்பிட்டு அவனது
சிறு இதயத்தில் முட்கள் விதைத்தீர்கள்.
யாருமற்ற அவனது உலகில்
பச்சைநிற காகமொன்று மட்டுமே பறந்து திரிந்தது.
குருட்டுக்காகம் அது என்று அவன் அறிந்துகொண்ட
நாளில்தான் தானொரு செவிடு என்பதை
உணர்ந்தழுதான்.
இரவொன்றின் மூன்றாம் சாமத்தில் சடசடவென்று
இறக்கைகள் முளைத்து காக்கைக்கூட்டத்துடன்
கலந்து பறக்கும் அவனது சந்தோஷத்தின் நிழலைக்கூட
உங்களால் தொடமுடியாதுதான்.
அவனுடன் சேர்ந்து பயணிக்கும் இக்கவிதையின்
எந்தவொரு சொல்லையும் உங்களால்
புரிந்துகொள்ளவே முடியாதுதான் மக்காள்!

வற்றாநதியில் மிதக்கும் ஆப்பிள்

தவழ்ந்து தவழ்ந்து தன் வயிற்றை
தரையில் இழுத்து இழுத்து
என்னிடம் வந்து சேர்ந்தது புன்னகையொன்று.
நான் அதற்கொரு ஆப்பிள் ஜூஸ்
வாங்கித்தந்தேன்.
மிக நிதானமாய் அதனை ரசித்து
அருந்திவிட்டு நகர்ந்தது.
அது மறைந்த மறுகணம் மூச்சிரைக்க
ஓடிவந்தது ஒரு துளி கண்ணீர்.
அதன் உடலெங்கும் துளிர்த்து மிளிர்கின்ற
வியர்வையை கைக்குட்டையால் துடைத்துவிட்டேன்.
கன்னத்தில் முத்தமிட்டு மீண்டும்
ஓடத்துவங்கியது.
மிக நிதானமாய் என்னுடலின் யன்னல் திறந்து
உள் தாழிட்டுக்கொண்டேன்.
சற்று தொலைவில் புன்னகையின் தோளில்
சாய்ந்தபடி நடந்து கொண்டிருந்தது
கண்ணீர் எனும் வற்றாநதி.


-நிலாரசிகன்.